Home > Uncategorized > உபநயனம் — சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

உபநயனம் — சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்


வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!
கல்வி கற்க, மாணவனை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வது உபநயனம் என்று பார்த்தோம். கல்வி தந்து அறியாமையை அகற்றுபவர் _ குரு. ‘கு’ என்றால் அந்தகாரம். இருட்டு. அறியாமை என்கிற இருட்டு. ‘ரு’ என்றால் அதை அகற்றுபவர். அறியாமை என்கிற இருளில் இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர். ‘தமஸோமா ஜ்யோதிகமய’ என்கிற வேதவாக்கை ஆராயவேண்டும். ‘குசப்த: து அந்தகார: ஸ்யாத், ருசப்த: தன்னிவர்த்தக:’ என்பது ரிஷி வாக்கு.

மனிதனைக் கவ்வியிருக்கும் அறியாமையை அறவே அழிக்கும் திறன் குருவிடம் இருக்கிறது. அறிஞன் ஆகிவிட்டால் தன்னையும் உலகையும் புரிந்துகொள்வான். பிறர் உதவியின்றித் தனது முழுமையில் மகிழ்ச்சி காண்பான்.
பறவை இனங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் மனிதனைப் பிரித்து, உயர்த்திக் காட்டுவது கல்வி _ அதனால் விளைந்த அறிவு. எல்லோருக்கும் கல்வி வேண்டும். கல்வி கற்பவன் பூணூல் அணிந்துகொண்டு குருவிடம் செல்வான். ‘கல்வி கற்க வந்திருக்கும் மாணவன்’ என்பதை குரு தெரிந்துகொள்வார். அரசர்கள், வியாபாரிகள் போன்றவர்களுக்குப் பூணூல் இருக்கும்.

காலப்போக்கில் அது அலட்சியப்படுத்தப்பட்டாலும் கல்யாணத்துக்கு முன் பூணூல் போட்டுக்கொள்வதும் கல்யாணச் சடங்குகள் முடிந்ததும் அதைக் கழற்றிவிடுவதும் இன்றும் பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. தெய்வ வடிவங்களுக்கும் நாம் பூணூல் போட்டு மகிழ்கிறோம். ஜீவராசிகளைப் படைக்கும் பிரம்மா பூணூலோடு காட்சியளிக்கிறார். ‘யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்’ என்கிற வரியைக் கவனிக்கவும்.
கல்வி கற்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தேவை. அதிக ஆயுள் இருப்பது பிரம்மாவுக்கு மட்டும்தான். பூணூல் அணிந்தால் ஆயுள், ஆரோக்கியம் இரண்டும் நிலைக்கும் என்பது வேதவாக்கு. ‘ஆயுஷ்யம் அக்ரயம்’ & என்பதைக் கவனிக்கவும். பிரம்மனைப் போல் ஆயுளும் ஆரோக்கியமும் பெற்றிட, கல்வி கற்கும் மாணவனுக்குப் பூணூலை சிபாரிசு செய்தார்கள் முனிவர்கள்.

குருவிடமிருந்து காதால் கேட்டுக் கல்வி கற்கவேண்டும். குரு சொல்லும் வார்த்தைகளின் உட்கருத்து, அதன் தரம், உயர்வு, பெருமை இவை அனைத்தையும் அவர் சொல்லும் பாணியிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் தத்துவ விளக்கத்தின் தெளிவு புலப்படும். புத்தகம் பார்த்துக் கல்வி கற்பதில் இவை அனைத்தையும் இழக்க வாய்ப்புண்டு. தபால் கல்வியைவிட கல்லூரிக் கல்வி சிறந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். படித்ததைச் சேமிக்க வேண்டிய இடம் _ மஸ்திஷ்கம் (மூளை). அதில் பதிவு செய்துவிட்டால் என்றும் அழியாமல் இருக்கும். தேவைப்படும்போது ஞாபகத்துக்கு வரும். புத்தகமில்லாமல் எல்லாவற்றையும் காதால் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மாணவனை குருவிடம் அனுப்பும் வழக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

அறுவடையான பிறகு நெல்மணிகளைச் சேமித்து வைக்கோலை ஒதுக்கிவிடுவோம். அதுபோல் நூல்களில் இருக்கும் விஷயங்களை மூளையில் பதியவைத்து நூல்களை அகற்றிவிடவேண்டும் என்பதுதான் முனிவர்கள் சொல்வது. ஒன்று தெரிகிறது, எந்தக் கல்வியானாலும் எந்தத் தத்துவ விளக்கமானாலும் எதை நாம் புரிந்துகொள்ளவேண்டுமானாலும் அது நிரந்தரமாக நம்மிடம் நிலைத்திருக்கவேண்டுமானால், அதை மூளையில் பதியவைக்கவேண்டும் என்பதே கல்வியாகக் கருதப்பட்டது. வேறு பொருட்களை நம்பாமல் தன் மூளையை மட்டுமே நம்பும்படியான ஒரு சூழலை ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.

பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், நம் மூளைத் திறனால் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். காளிதாஸர் சொல்வார்:
புராண மித்யேவ ந ஸாது
ஸர்வம்
நசாபி காவ்யம் நவமி
த்யவத்யம்
ஸந்த பரீக்ஷ்ய அந்யதரத்
பஜந்தே
மூட: பரப்ரத்யய நேய புத்தி: ‘பழையது என்பதாலேயே எல்லாம் நல்லது என்று நினைக்காதே. புதியது என்பதாலேயே அது உபயோகப்படாது என்று தள்ளிவிடாதே. இரண்டையும் ஆராய்ந்து பார்த்து, எது நல்லதோ அதை எடுத்துக்கொள். இதை விட்டுவிட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக எதையும் ஆராயாமல் அப்படியே கடைப்பிடிப்பவன் முட்டாள்’ என்கிறார் காளிதாஸர்.

இந்த ஆராயும் தகுதியை வரவழைப்பதுதான் கல்வியின் நோக்கமாகக் கருதப்பட்டது. ஆகையால், காதால் கேட்டு மூளையில் வாங்கிக் கற்கவேண்டும் என்கிற அந்தக்காலக் கோட்பாடு எக்காலத்துக்கும் பொருந்துவது. தான் மட்டும் செம்மை பெறுவதாக இல்லாமல், தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் சமூகத்தையும் தனது அனுபவத்தால் செம்மைப்படுத்தி எல்லாரையும் வாழவைக்கும் அளவுக்கு கல்விக்குத் திறன் உண்டு. ஆகையால் சிறு வயதில் இருப்பவன் உபநயனம் என்கிற சடங்கோடு சேர்த்துக் கல்வி கற்க முயற்சிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ரகுவம்சம் என்ற காவியத்தில் அரச குலத்தினரின் நடைமுறைகளைப் பற்றி விளக்கும் காளிதாஸர்,
‘சைஸவே அப்யஸ்த
வித்யானாம்
யௌவனே விஷயைஷணா’
என்கிறார். ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்கள், எந்தக் கல்வியைக் கற்றால் வேறு எதையும் கற்கத் தேவை இல்லையோ, அந்த விதமான கல்வியைச் சிறுவயதிலேயே கற்கத் தொடங்கினார்கள் என்கிறார்.

ஆகையால் சிறுவயதிலேயே, தெளிவான, சந்தேகத்துக்கு இடமில்லாத, மூளையில் பதிவதான கல்வியை குருவின் கிரகத்தில் இருந்து கற்பது கடமைகளுள் ஒன்று என்பதால், அதை சம்ஸ்காரங்களுள் முக்கியமானதாக வைத்தார்கள். இப்படியான கல்வி கற்க உடலாரோக்கியம் மட்டும் போதாது. உள்ளத் தூய்மையும் வேண்டும். அவ்வளவு சிறு வயதில் உள்ளத் தூய்மை ஏற்படுத்துவது எப்படி? அவனது நடை, உடை, பாவனைகளை மாற்றி அவன் மனதில், ‘நாம் கல்வி கற்கச் செல்கிறோம். குருவிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். அவர் சொன்னதைக் கேட்கவேண்டும். அவர் சொல்லும் விஷயங்களை வாங்கிக்கொள்ளவேண்டும். அதை மனதில் பதியவைக்கவேண்டும். இவையனைத்தும் நம் கடமை’ என்கிற எண்ணத்தை அரும்பவைக்க இந்தச் சடங்கு மறைமுகமாக உதவுகிறது.

கல்வி, வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. ஆன்மிகத்துக்கும் பயன்படுகிறது. வாழ்க்கை, சுவைக்கப்பட்ட பிற்பாடு ஆன்மிக வழியில் திரும்ப அந்தக் கல்வியே வழிவகுக்கிறது. மனிதனாகப் பிறப்பெடுக்கும்போதே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் இப்படி எதிரிடையான எண்ணங்கள் இருக்கும். ஸ்நேகம், கருணை, தயை, தாட்சண்யம், பரோபகாரம், அன்பு இந்த குணங்களும் கலந்தே மனதின் அடித்தளத்தில் நீறுபூத்த நெருப்பு மாதிரி இருக்கும். படிப்படியாக கெட்ட எண்ணங்களை அழித்து, மெள்ள மெள்ள நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள உதவி செய்வது சம்ஸ்காரம். தீய சிந்தனைகளைத் தலைதூக்க விடாமல் செய்யவேண்டும். நல்ல எண்ணம், தலைநிமிர்ந்து பிரகாசிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். இவை இரண்டும்தான் சம்ஸ்காரத்தின் செயல்பாடு. வெளிப்படையான சில சட்டதிட்டங்கள், நியதிகளை ஏற்படுத்தி, அந்தச் சின்ன வயதில் படிப்பைத் தவிர அவன் மனம் வேறு எதிலுமே ஈடுபட வாய்ப்புத் தராமல், தாய்_ தந்தையை விட்டு வெளியே வந்து, குருதான் எல்லாமே என்கிற கட்டுப்பாட்டு உணர்வைத் தோற்றுவிப்பதற்கு உபநயன சம்ஸ்காரம் செய்யவேண்டி இருக்கிறது.

வேதத்தில் இருந்து தொடங்கி சாஸ்திரம், புராணம், இதிகாசம், நீதிநூல்கள் என்று சம்பிரதாயமாக வந்திருக்கிற எல்லா நூல்களையும் புரட்டிப் பார்த்தால் ஒன்று புலப்படும். படித்து முடிக்கையில் நமக்கு ஒரு தத்துவ விளக்கம் கிடைத்திருக்கும். ராமாயணம் படிக்கிறான் ஒருவன். என்ன தெரிந்துகொள்கிறான்? ராமனைப் போல வாழவேண்டும்; ராவணனைப் போல வாழக்கூடாது என்று உணர்கிறான். பாரதத்தைப் படிக்கிறான். அதில் என்ன கிடைக்கிறது? எங்கெல்லாம் தர்மம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. எங்கே அதர்மம் இருக்கிறதோ அங்கே தோல்வி இருக்கிறது என்கிற தத்துவ விளக்கம் இவன் சிந்தையில் ஏறும்போது நல்ல எண்ணங்கள் ஏற்பட வழிகிடைக்கிறது.

‘ராமன் செய்ததை எல்லாம் செய். கிருஷ்ணன் சொன்னதை எல்லாம் செய். கிருஷ்ணன் செய்ததைச் செய்யாதே’ என்று ஒரு பழமொழியே சொல்வார்கள். மனதை அடக்கும்போது மகிழ்ச்சி கிடைக்கும் என்று புரியவைப்பது உபநயன சம்ஸ்காரம்.

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: